யாழில் நாளை நீதிக்கான பேரணி; அனைவரும் அணிதிரள வேண்டும் : மணிவண்ணன் அழைப்பு
“சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.”
– இவ்வாறு யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களால் பல்வேறு தரப்பினரிடம் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களான தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் தீர்வு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாளை புதன்கிழமை கிட்டு பூங்காவில் இருந்து நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் திடல் வரையில் ஒரு மாபெரும் பேரணியைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தப் பேரணியில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெருமளவான மக்கள் வரவுள்ளனர்.
எனவே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கின்றேன், இந்தப் பேரணியில் உணர்வுபூர்மாகக் கலந்துகொண்டு இந்தப் பேரணி வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” – என்றுள்ளது.