அஸாத் ஸாலி ஏன் கைது? விளக்குகின்றார் நிமல் லன்ஷா.
“மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுச் சட்டத்துக்கு அனைத்து இனத்தவர்களும் கட்டுப்பட வேண்டும். இதை மீறி அவர் செயற்பட்ட காரணத்தாலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.”
இவ்வாறு கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி பொதுச் சட்டத்துக்கு அடிபணிய முடியாது என்று குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் அவரிடம் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும், அடிப்படைவாத செயற்பாடுகளைத் தூண்டிவிடும் வகையிலும் அமைந்துள்ளன.
அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முரண்பாடான கருத்துக்களை குறிப்பிட்டு அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள்.
நாட்டின் பொதுச்சட்டத்துக்கு அனைவரும் அடிபணிய வேண்டும். சட்டத்தின் முன்னிலையில் இனம், மத மற்றும் மொழி அடிப்படையிலான காரணிகள் செல்வாக்குச் செலுத்தாது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கம் வகையில் குறிப்பிடப்படும் கருத்துக்களை அலட்சியப்படுத்த முடியாது.
கடந்த நல்லாட்சி அரசு தேசிய பாதுகாப்பை அரசியல் நோக்கத்துக்காகப் பலவீனப்படுத்தியது. இதன் விளைவு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக உருவெடுத்தது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை நல்லாட்சி அரசு அரசியல் கோணத்தில் முன்னெடுத்தமையால் அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முடியவில்லை.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பலமான அரசை ஸ்தாபித்துள்ளார்கள்.
குறுகிய காலத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எமது அரசு தேசிய பாதுகாப்புக்கு மாத்திரம் எந்நிலையிலும் முன்னுரிமை வழங்கும்” – என்றார்.