ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்!
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற, இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தினை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் ரூபா 3689 கோடி (ரூ. 36.89 பில்லியன்) நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, குறித்த சந்தேகநபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் மீது, அவ்வழக்குகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட விசேட மேல் நீதிமன்றங்களில் சட்ட மாஅதிபரினால் இன்று (17) குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்ய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ், அந்நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், பணிப்பாளர்களான கசுன் பலிசேன, சித்த ரஞ்சன் ஹுலுகல்லே மற்றும் இலங்கை மத்திய வங்கியின் இரு அதிகாரிகளான எஸ். பத்மநாதன், இந்திக சமன் குமார உள்ளிட்டோர் மீதே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.