மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலி. ஐ.நா. கவுன்சில்.
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஆட்சி பொறுப்பை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மியான்மரின் யாங்கூன், மாண்டலே, பாகோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2,400-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மியான்மரில் முக்கிய நகரங்களில் இணைய முடக்கம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதனால், மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்து இருப்பதாகவும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.