இந்தியாவில் மேலும் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.கொரோனாவிற்கு மேலும் 172 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பயணம், தொடர்கதையாய் நீண்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இப்போது மீண்டும் தொற்று பரவல் வேகம் எடுத்து வருவது அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் கூட புதிதாக 35 ஆயிரத்து 871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 74 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.
தினந்தோறும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை 100-க்குள் இருந்து வந்த நிலை மாறி உள்ளது. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் இறந்து வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் 188 பேர் இறந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 172 ஆக உயர்ந்து அதிர வைத்துள்ளது. இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் விளைவாக, கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து இன்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 741 பேர் குணம் அடைந்தனர்.
இதன்மூலம் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 63 ஆயிரத்து 025 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 8-வது நாளாக நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றும் உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி 2 லட்சத்து 52 ஆயிரத்து 364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை மறுபடியும் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.