தான்சானியா அதிபர் இதய கோளாறுகளால் மரணம்.
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 2015-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்தவர் ஜான் மாகுபுலி (வயது 61). இவர் கடந்த 2 வாரங்களாக பொதுவெளியில் வரவில்லை. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இதய கோளாறுகளால் டார் எஸ் சலாமில் உள்ள ஆஸ்பத்திரியில் இறந்தார் என்று அந்த நாட்டின் துணை அதிபர் சமியா சுலுகு ஹசன் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்தார்.
அப்போது அவர், “ஆழ்ந்த வருத்தத்தோடு நான் இதை உங்களுக்கு அறிவிக்கிறேன். நமது தான்சானியா நாட்டின் துணிச்சலான அதிபர் ஜான் மாகுபுலியை நாம் இழந்து விட்டோம். அவரது மறைவுக்கு நாடு 2 வாரங்கள் துக்கம் கடைப்பிடிக்கும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்” என தெரிவித்தார்.மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மாகுபுலி கடைசியாக கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதிதான் பொது வெளியில் காணப்பட்டார்.
தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி, துணை அதிபர் சமியா சுலுகு ஹசன், ஜான் மாகுபுலியின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு அதிபராக இருப்பார். ஜான் மாகுபுலியின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டுதான் தொடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.
மறைந்த ஜான் மாகுபுலிக்கு ஜேனட் மாகுபுலி என்ற மனைவியும், ஜெசிகா மாகுபுலி, ஜோசப் மாகுபுலி என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.