ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இராஜாங்க அமைச்சரும், பிரதேச
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் (19) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப்பிரிவில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தோடு பிரதேசத்தின் பாரிய பிரச்சனையாக கருதப்படும் மணல் அகழ்வு தொடர்பாக பேசப்பட்ட போது வேப்பவெட்டுவான் வீதியூடாக மணல் அகல்வில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த வீதியை புணரமைப்பு செய்யும் வரைக்கும் அவ் வீதியூடாக மணல் அகழ்வில் ஈடுபடக்கூடாதெனவும், குறித்த வீதி உட்பட மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களையும் பார்வையிட்டு தீர்மாணங்களை மேற்கொள்வதற்கென பிரதேச செயலாளர் தலைமையில் அரசியல் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று எதிர்வரும் 29 ஆந் திகதி பார்வையிடுவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவரும் பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான ப.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள், மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.