காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு.டக்ளஸ் வாக்குறுதி.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்துக்குள் தீர்வு பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயற்படுகின்றனர்.
ஒரு தரப்பினர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கக் கூடாது எனவும், இன்னொரு தரப்பினர் இதற்குரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் ஒரு மாதத்துக்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குரிய தீர்வு, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுக்கப்படும்” – என்றார்.
இந்தக் கலந்துரையாடலின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், தங்களது உறவுகள் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனவும், பலருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவே நான் முயற்சிக்கின்றேன். இதனை, தீராத பிரச்சினையாக வைத்திருக்க நான் விரும்பவில்லை. சில அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையைத் தீராத பிரச்சினையாக வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.
எனினும், நான் இதற்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இன்று முதற்கட்டமாக உங்களைச் சந்தித்துள்ளேன்.
எதிர்வரும் காலங்களில் உங்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று உரிய தீர்வு பெற்றுத்தர முடியும் என எதிர்பார்க்கின்றேன்” – என்றார்