இலங்கை- பங்களாதேஷ் பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பு!
பங்களாதேஷ் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் , பங்களாதேஷ் நாட்டு பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (2021.03.20) காலை தலைநகர் டாக்காவில் இடம் பெற்றது.
குறித்த இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் இடம் பெற்றது. பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அந்நாட்டு பிரதமர் சிறந்த முறையில் வரவேற்றார்.
இச்சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் வருமாறு,
எம்மை சிறந்த முறையில் வரவேற்றமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர தின பொன்விழாவிலும், பங்களாதேஷ் நாட்டின் தேசப்பிதாவாக கருதப்படும் பங்கபந்து செய்க் முஜ்பூர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது ஜனன தின விழாவில் கலந்துக் கொள்வதற்கு நீங்கள் விடுத்த அழைப்பிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.
எம்மை வரவேற்பதற்கு நீங்கள் விமான நிலையத்துக்கு வருகை தந்தமை எமது நாடு மற்றும் இலங்கை மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்தியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களின் மனமார்ந்த வாழ்த்தினை பங்களாதேஷ் நாட்டின் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் அவர்களே, 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜனாதிபதியாக பதவி வகித்த வேளை பங்களாதேஷிக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது என்னையும், எனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவையும் சிறந்த முறையில் வரவேற்றமை இன்றும் நினைவில் உள்ளது.
1998 ஆம் ஆண்டு வலய ஒத்துழைப்பு தொடர்பிலான தெற்காசிய (சார்க்) மாநாட்டிலும், 2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டிலும் நீங்கள் கலந்துக் கொண்டமை நினைவில் உள்ளது.
பிரதமர் அவர்களே, எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 2022 ஆம் ஆண்டு 50 ஆவது வருடத்தை நோக்கி செல்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.இதனை கொண்டாடும் வகையில் எனது கௌரவ இராஜதந்திர அதிதியாக நீங்கள் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று பெருமிதத்துடன் அழைப்பு விடுக்கிறேன்.
இந்த விசேட நிகழ்விற்கு பங்களாதேஷ் நாட்டுக்கு வருகை தந்துள்ளமைக்கும், உங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தமைக்கும் பெருமகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்களாதேஷ் பிரதமரிடம் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்களாதேஷ் நாட்டுக்கான விஜயம் தனிப்பட்ட முறையில் தனக்கும், பங்களாதேஷ் நாட்டு மக்களுக்கும் கௌரவமானது என்று இதன் போது பங்களாதேஷ் நாட்டு கௌரவ பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தார்.