பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிடுகிறார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் மனு பரிசீலனை நடைபெற்றபோது, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனு ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். அந்த மனுவில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆனால் அண்ணாமலை தனது வேட்பு மனுவில் அதற்கான தகவல்களை மறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து பரிசீலனை நடைபெற்றது.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவின் முதல் பக்கத்தில் தன் மீது குற்ற வழக்குகள் இருப்பதை குறிப்பிடாமல், இரண்டாவது பக்கத்தில் தனியாக குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தனர்.