மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கைக்கு 129ஆம் இடம்.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தையொட்டி ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலையமைப்பால் 149 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலக மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான வருடாந்த மதிப்பீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தனிநபர் சுதந்திரம், மொத்த தேசிய உற்பத்தி, ஆயுட் காலம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த முறை வெளியான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை முன்னேறி 129ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதேவேளை, உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், டென்மார்க் இரண்டாம் இடத்தையும், சுவிற்சர்லாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
அத்துடன் 1 முதல் 10ஆம் இடம் வரையிலான நாடுகளில் 9 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாகும். அதேவேளை, ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதன்படி பட்டியலில் 32ஆவது இடத்தில் அந்த நாடு உள்ளது.
அத்துடன் பட்டியலில் 149 இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.