அசாத்சாலி கைதின் எதிரொலி : இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தாக்கத்தை உருவாக்கும் அமெரிக்கா …
அசாத் சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிஐடி அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்க முடியாது என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தே அவரை கைது செய்தமைக்கான காரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் உட்பட பல விடயங்கள் தொடர்பாக அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸார் பின்னர் தெரிவித்திருந்தனர்.
தற்போது சாலியை கைது செய்தமை தொடர்பாக சர்வதேச சமூகம் இலங்கை மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. விசேடமாக இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணை முன்வைத்துள்ள சந்தர்ப்பத்தில் இத்தகைய கைது நடவடிக்கை தொடர்பாக பல நாடுகள் கவனம் செலுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கடுமையான மனித உரிமை மீறல்கள் இரும்பெறுவதாக மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் வலுவாக வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தது. இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உறுதியளித்துள்ளார்.
இந்த பின்னணியில் தான் அசாத் சாலி கைது நடைபெறுகிறது.
தற்போது இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையும் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்க்ஸ் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக விசாரிக்க ஒரு அமெரிக்க வெளியுறவு செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 14ம் திகதி கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் கவனம் செலுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மாற்றம் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடனின் நியமனத்துடன் மனித உரிமைக் கொள்கைகளில் கடுமையான மாற்றம் நிகழ்ந்துள்ளது. டொனால்ட் டிரம்பின் கீழ் மனித உரிமைகள் தொடர்பாக எவ்வித அவதானமும் செலுத்தப்படாத நிலையில் ட்ரம்ப் சர்வதேச அரசியல், புற நாடுகள் தொடர்பாக அவதானத்தை செலுத்துவதை விட தனது சொந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து மட்டும் அவதானத்தை செலுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும் ஜோ பைடன் ஆட்சி ஆரம்பித்தவுடன் உலகமுழுவதும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்தும் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு முன்னர் இருந்தாற்போல வழமையான நிலைக்குத் திரும்புகிறது.
இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில்,ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரின் கைதுகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ள நிலையில் திர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது கூட அழுத்தம் கொடுக்கக்கூடும். இதுபோன்ற அழுத்தங்களை எதிர்கொண்டு சாலி விரைவில் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 08 மாதங்களுக்கும் மேலாக குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் இறுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. இதுவரையும் அசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
மனித உரிமைகள் பேரவை முன்னிலையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பாக மோசமாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆணைக்குழுவில் உறுப்புரிமை வகிக்கும் 11 முஸ்லிம் நாடுகள் உள்ளதுடன் அந்த நாடுகள் அனைத்தினதும் ஆதரவு அதற்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. இருப்பினும், ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொண்டு, சில நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கலாம் (பிரேரணைக்கு ஆதரவாக) அல்லது விலகலாம். அப்படியானால், அது இலங்கைக்கு கடுமையான தோல்வியாக இருக்கும்.