பிரேரணை கொண்டுவர ஆதரவு வழங்கிய 40 நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை.

இலங்கை மீது ஐ.நா. பிரேரணையைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை மீது பிரேரணையை முன்வைப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ள 40 நாடுகளும் உலகத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தவை. அவை முழு உலகையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.
இந்த ஐ.நா. பிரேரணை நீதியை நிலைநாட்டுவதற்காக அன்றி, வெளிநாட்டு சக்திகளின் அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான ஒன்றாகும்.
ஐ.நா. தீர்மானங்கள் வெளிநாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான படிமுறை ரீதியான முயற்சியே ஆகும்.
இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகள் இதற்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசைப் பாதுகாத்தது. ஆனால், குறித்த நாடுகள் இப்போது எமது அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றன” – என்றார்.