ஜெனிவாப் பரபரப்புக்கு மத்தியில் கோட்டா, மஹிந்த அரபுத் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள்!
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அரபுத் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கும், பிரதமர் மஹிந்த பஹ்ரைனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹமாதுக்கும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
இஸ்மாமிய ஒத்துழைப்பு அமைப்பு 57 அரபு நாடுகளின் கூட்டணியாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், அரசு இறுதி முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கு இலங்கையின் ஜனாதிபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது எனவும், இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது எனவும் அந்த அமைப்பு ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இதேநேரம், தான் பஹ்ரைனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹமாதுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு இரு தரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடினார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.