ஆட்சி மாற்றத்தால் பேராபத்தில் இலங்கை! சந்திரிகா குற்றச்சாட்டு.

“சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே பிரதான காரணமாகும்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த நல்லாட்சி அரசு நூறு வீதம் திறன் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அந்த ஆட்சியில் சர்வதேசத் தலையீடுகள் இருக்கவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து நாடு பயணித்தது.
ஆனால், இந்த ஆட்சியில் சர்வதேசத் தலையீடுகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. ராஜபக்ச அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே இதற்குக் காரணமாகும்.
நாட்டிலுள்ள மூவின மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய அரசு, தமிழ், முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே புறந்தள்ளி வைத்துள்ளது; அவர்களின் மத, கலாசார உரிமைகளில் கைவைத்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள்தான் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகளை அதிகரிக்கச் செய்துள்ளன” என்றார்.