கோட்டா அரசின் காடழிப்புக்கு எதிராக ஜே.வி.பி. கொழும்பில் போராட்டம்!
இலங்கையில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.
‘மூச்சுக் காற்றைப் பாதுகாத்துக்கொள்ள கொழும்புக்கு வாருங்கல்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
“ஆட்சியாளர்களே! சுற்றாடல் அழிப்பினை உடனடியாக நிறுத்து!” என்ற கோஷத்துடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூழல், சுற்றாடல் விடயங்களில் இனவாதத்தைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது காடழிப்பில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த அரசு 8 இலட்சம் ஏக்கர் காட்டை வர்த்தமானி அறிவிப்பு மூலம் விடுவித்து, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.