ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடு; மீள நடத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால், அப்பரீட்சையை உடனடியாக இரத்துச் செய்து, மீள் பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை (HNDE) சேர்த்துக் கொள்ளும் நோக்கில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் நுண்ணறிவு வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த நுண்ணறிவு வினாத்தாளில் வந்திருந்த இருபதுக்கு மேற்பட்ட வினாக்கள், பிரபல போட்டிப் பரீட்சை வளவாளர் ஒருவரினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பரீட்சைக்கு முன்னர் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட்டு, இந்த வளவாளரினால் விரிவுரைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அவரது விரிவுரை வகுப்புக்களில் கலந்து கொண்டவர்கள் கூடுதலான புள்ளிகள் பெற்று, ஏனையோர் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேவேளை கல்முனையில் பரீட்சை நடைபெற்ற பரீட்சை மண்டபமொன்றில் 08 பரீட்சார்த்திகளுக்கு நுண்ணறிவு பாட வினாத்தாள் இன்மையால் போட்டோ பிரதி செய்யப்பட்ட வினாத்தாள்கள் பரீட்சை ஆரம்பமாகி சுமார் 12 நிமிடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பரீட்சார்த்திகளுக்கு மேலதிக நேரம் வழங்கப்படாமல் உரிய நேரத்திற்கே இவர்களிடமிருந்தும் விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளன. இது பெரும் அநீதியாகும். இது தொடர்பாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தபோதும் அப்பரீட்சார்த்திகளுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.
மேற்படி பரீட்சை மோசடி, முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்டோர் அறிவித்துள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுனர் இவ்விடயம் குறித்து ஆராயுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் பொறுப்பளித்துள்ளார்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இவற்றை கவனத்தில் கொள்ளாமல் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே, உடனடியாக மேற்படி போட்டிப் பரீட்சையை இரத்துச் செய்து, மீளவும் அப்பரீட்சையை நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் அம்மகஜரில் வலியுறுத்தியுள்ளார்.
(செயிட் ஆஷிப்)