நாடு திரும்பிய இலங்கையர்கள் 40 பேருக்குக் கொரோனா உறுதி.
இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 40 இலங்கையர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணி வரையான 24 மணி நேரங்களில் இலங்கையில் மொத்தம் 314 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 40 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்நாட்டில் 274 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் அதிகளவானவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
நேற்று தொற்று உறுதியானவர்களில் 52 பேர் திருகோணமலையைச் சோ்ந்தவர்கள். இதனைவிட களுத்துறையில் 30 பேருக்கும், கம்பஹாவில் 29 பேருக்கும் தொற்று உறுதியானது.
நேற்று மொத்தம் 5 ஆயிரத்து 983 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 314 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதிய தொற்று நோயாளர்களுடன் இலங்கையில் பதிவான மொத்தத் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 87 ஆயிரத்து 57 பேர் குணமடைந்துள்ளனர். 551 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆயிரத்து 905 பேர் தொடர்ந்தும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் அமைந்துள்ள 102 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது 10 ஆயிரத்து 692 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.