கொரோனா கொத்தணி அபாயம்! யாழ். நகர் மரக்கறிச் சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள மரக்கறிச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 9 வியாபாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் (பனம் பொருள்கள்) வியாரிகளும், 3 மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர்.
அதனால் சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.