இலங்கைக்கு ஐ.நாவில் அபகீர்த்தி; பொருளாதாரத்தடையும் வரக்கூடும் – சஜித் அணி எச்சரிக்கை
சர்வதேச நாடுகளுடன் இலங்கை அரசு கொண்டிருந்த முரண்பாடான கொள்கையே ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படக் காரணமாக அமைந்துள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்லவே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த நல்லாட்சி அரசு, இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வராதவாறு சர்வதேச நாடுகளுடன் நற்புடன் நடந்துகொண்டபோதும், தற்போதைய அரசு சில நாடுகளுடன் மாத்திரம் கைகோர்த்துக்கொண்டு மற்றைய நாடுகளுடன் முரண்பாடான கொள்கைகளையே பின்பற்றுகின்றது.
இதனால் ஜெனிவாவில் இலங்கை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு அபகீர்த்தியானது.
ஐரோப்பிய நாடுகளினால் பொருளாதாரத் தடைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படக் கூடும்” – என்றார்.