பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய பொறிமுறையை உருவாக்கியுள்ளது அரசு : நாடாளுமன்றில் தினேஷ்
“ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தாலும், இலங்கையின் அரசமைப்புக்கு அமைவாகச் செயற்படுத்தப்படும் வகையில் தேசிய பொறிமுறை ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது.”
– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2015ஆம் ஆண்டில் ஜெனிவாவில் இலங்கை அரசு இணை அனுசரணை வழங்குவதாகக் கையொப்பமிட்டதால் வெளிநாட்டு சக்திகளிடம் நாடு கட்டுப்பட்டு இருந்தது. அதிலிருந்து விடுபட்டுக்கொள்ள மக்கள் ஆணையொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தற்போது அரசமைப்புக்கு அமையச் செயற்படும் விதமாக, பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த நீண்ட பதிலை நாளை சபையில் முன்வைக்கவுள்ளேன்” – என்றார்.