ஐ.நா. தீர்மானத்தால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை! டிலான் பெரேரா தெரிவிப்பு.

“இலங்கை இராணுவத்தினர் இனப்படுகொலையை முன்னெடுத்தார்கள் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப்புலிகள் அமைப்பினரே தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். இலங்கையின் மனித உரிமைகள் குறித்து விமர்னம் தெரிவித்துள்ள நாடுகளின் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 46|1 தீர்மானத்தால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.”

இவ்வாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46|1 தீர்மானத்தை அரசின் தோல்வி என எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்தத் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டதல்ல. மாறாக 30 வருட கால போரை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட என்பதை எதிர்த்தரப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும். இதனை தேசிய பிரச்சினையாகக் கருத வேண்டும்.

இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஜெனிவாவில் இலங்கை விவகாரம் ஒவ்வொரு வருடமும் பேசப்படுகின்றது. இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்பெறாது.

தமிழ் மக்களின் உரிமைகளை இராணுவத்தினர் பறித்தார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் இளைஞர், யுவதிகளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் பலவந்தமாகப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள். சிறுவர்கள்கூட பலவந்தமான முறையில் போராளிகளாக்கப்பட்டார்கள். இதனை மனித உரிமை மீறலாக ஏன் சர்வதேசம் கருதவில்லை?

இலங்கையின் மனித உரிமைகளை விமர்சிக்கும் நாடுகளின் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழு உலகமும் நன்கு அறிந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இவர்கள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றமை குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை வெளிப்படைத் தன்மையுடன் அறிந்துகொள்ளலாம்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் இலங்கைக்கும், அரசுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இராணுவத்தினரையும், நாட்டின் சுயாதீனத்தன்மையையும் எந்தக் காரணிகளைக் கொண்டும் விட்டுக் கொடுக்கமாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.