நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலான நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டுவிட்டர் பதிவு மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ள மாதவன், தான் உடல்நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.