ஐ.நா. தீர்மானம் எமக்கு பக்க பலம்! மாவை தெரிவிப்பு.
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்று நாம் நம்புகின்றோம்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டிருந்த இலங்கை அரசு தொடர்பான அறிக்கை மிகவும் காத்திரமானதாக இருந்தது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எமக்கு ஏமாற்றம் தந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புக்கள் பல ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமன்றி தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும் குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கூடிய பங்களிப்பைச் செய்வார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம்.
நவநீதம்பிள்ளை அம்மமையார் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவிருந்தபோது அன்று ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச அவரை நாட்டுக்குள் வரவிடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறியிருந்தார். பின்னர் அவரை வர அனுமதித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதும் அம்மையாரை நாம் சந்தித்தோம்” – என்றார்.