உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: தன் மீதான குற்றச்சாட்டுகளை மைத்திரி அடியோடு நிராகரிப்பு.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இலங்கையில் போர்க்காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன எனவும், அவை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பதால் அதிகாரிகளுக்கு அதில் பொறுப்புக்கூறல் இருக்கவில்லை எனவும், அதேபோன்றே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையும் பார்க்க வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2015இல் ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர் தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை. துரதிஷ்டவசமாகவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்துள்ளது.
அந்தக் காலப்பகுதியில் ஐ.எஸ். இயக்கத்தால் உலக நாடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. அது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடி, அதுபோன்ற தாக்குதல் இலங்கையில் நடப்பதை தடுக்குமாறு அதிகாரிகளுக்குக் கூறியிருந்தேன்.
எவ்வாறாயினும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக, அதற்கு முன்னர் புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த நிலையில், அந்தத் தகவல் புலனாய்வு அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டிருந்தபோதும், தாக்குதல் நடந்து முடியும் வரையில் அது பற்றி எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை” – என்றார்.