யாழில் அடுத்து வரும் சில நாட்களுக்கு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 300 இற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவருமான க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 143 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஓரிரு நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து குறைவடையும் எனச் சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.
சுயதனிமைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றிரவு வரை 244 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரப் பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர், திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.