திருநெல்வேலி சந்தை கொத்தணி: 177 பேருக்கு இதுவரை கொரோனா.
திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களோடு தொடர்புபட்ட 177 பேருக்கு இந்த மாதம் இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் தற்போது அதிகரிக்கும் கொரோனா நிலைமை தொடர்பில் இன்று மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“திருநெல்வேலி பொதுச்சந்தையில் கடந்த மாதமும் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இந்த மாதமே தொற்று தீவிர பரவலடைத்துள்ளது. திருநெல்வேலி பொதுச்சந்தையில் தொடர்ந்தும் பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறும். அதேகாலத்தில் ஏனைய சந்தைகளும் கண்காணிக்கப்படும்.
இதேநேரம், யாழ். மாநகரில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையத்தினரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும், வழக்கமான நிகழ்வுகளை இரத்துச் செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது” என்றார்