மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் – ஆளுங்கட்சிக்குள் இருந்து வலியுறுத்தல்.

“காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். ஜெனிவா விவகாரத்தில் மாகாண சபை தேர்தல் விவகாரம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் குறிப்பிட முடியாது. ஏனெனில், இலங்கை ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசத்துடன் ஒன்றிணைந்துள்ளது.”
இவ்வாறு லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இலங்கையின் இராஜதந்திர உறவும், இலங்கை மீது சர்வதேசம் கொண்டுள்ள பார்வை குறித்தும் அதிகம் ஆராய நேரிட்டுள்ளது.
இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன. கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஆசிய நாடுகள் மத்திய நிலை வகித்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளை பிரதானமாகக் குறிப்பிட வேண்டும்.
மத்திய நிலை வகித்த நாடுகள் இலங்கைக்குச் சார்பாகச் செயற்பட்டுள்ளன எனக் கருத முடியாது. 14 நாடுகள் இலங்கை விவகாரம் தமக்குத் தேவையற்றது என ஒதுங்கியுள்ளன.
இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஜெனிவா விவகாரத்தில் அரசு சற்று வினைத்திறனான முறையில் செயற்பட்டிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.
சர்வதேச நாடுகளுக்கு அடிபணிய முடியாது எனப் பேச்சளவில் மாத்திரமே குறிப்பிட முடியும். இலங்கையின் ஒரு சில உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் கவனம் செலுத்தும். இலங்கை ஜனநாயகக் கோட்பாடுகளை முன்வைத்து சர்வதேசத்துடன் ஒன்றிணைந்துள்ளது. ஆகவே, ஜனநாயக விவகாரங்கள் குறித்து சர்வதேசம் கேள்வி எழுப்பும்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து அரசு அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஜெனிவாவில் மாகாண சபைத் தேர்தல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு கடந்த அரசின் இரு அரச தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.