பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சகலரும் இலங்கையில் தடையாம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளைப் பின்பற்றும் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சகலரையும் இலங்கை அரசு தடை செய்யும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
7 புலம்பெயர் அமைப்புகளுக்கும், 388 நபர்களுக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளமை குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதமும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான கொள்கைகளை உடையவர்களுடன் இலங்கை அரசு தொடர்புகளைப் பேண வேண்டிய அவசியம் கிடையாது.
இதனால் இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் குழுக்கள் மற்றும் நபர்களை அரசு தடை செய்யும்” என்றார்.