சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தை ஒருபோதும் முன்னிலைப்படுத்த முடியாது கோட்டா அரசு திட்டவட்டம்.
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு இலங்கை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் ஒருபோதும் கொண்டுசெல்ல முடியாது. பாதுகாப்புச் சபை ஊடாக முயற்சி எடுக்கப்பட்டால்கூட அதனை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாயையொன்றை உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்துவதற்கு எதிரணி முயற்சிக்கின்றது. இது தொடர்பில் எவரும் அச்சப்படவேண்டியதில்லை. அத்துடன், எமது நாட்டு முப்படையினரையும், அரசியல் தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கான சூழல் குறித்த தீர்மானத்தின் ஊடாக உருவாகியுள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர். இது தவறான கருத்தாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கு இரு வழிகள் உள்ளன. இதில் ஒன்றுதான் ரோம் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அடுத்ததாக ஐ.நா. பாதுகாப்பு சபை கட்டளையிட்டால் சர்வதேச நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும். இதன்படி யோசனையொன்று முன்வைக்கப்பட்டால்கூட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கும். எனவே, இலங்கை படையினரையோ, அரசியல் தலைவர்களையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லமுடியாது.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபை என்பது கலந்துரையாடல் களமாகும். அங்கு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. அதற்கான அதிகாரம் பாதுகாப்பு சபைக்கு மட்டுமே இருக்கின்றது” – என்றார்.