ஊருக்காக உருகிய ‘உமர் முக்தார்’ வை.எம்.ஹனிபா.
சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார், தனது 86ஆவது வயதில் திங்கட்கிழமை (29) மாலை காலமானார்.
அவரது ஜனாஸா அன்றைய தினம் இரவு சாய்ந்தமருது தக்வா மையவாடியில் பெரும்திரளான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஹனீபா மாஸ்டர் என்று கல்வி மற்றும் சமூகப் பரப்பில் பிரபலம் பெற்றிருந்த வை.எம்.ஹனிபா சாய்ந்தமருது, கல்முனை உட்பட நாட்டின் பல்வேறு பாடசாலைகளிலும் ஒரு நல்லாசானாக கடமையாற்றியுள்ள்ளார்.
கல்விச் சேவையில் சுமார் 35 வருடங்கள் அனுபவத்தைக் கொண்டிருந்த இவர், அதிபர் சேவை தரம்-1 வரை பதவியுயர்வு பெற்றிருந்தார். இருந்தபோதிலும் தான் இறுதியாக கடமையாற்றிய கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பிரதி அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.
1977 தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சராகவும் பதவி வகித்த மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ள இவர் இப்பகுதிக்கு பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்துள்ளார்.
அக்காலப்பகுதியில் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபைத் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயராகவும் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினராகவும் பின்னர் உப தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றி வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் மரணிக்கும் வரை அதன் தலைவராக இருந்து பெரும் சேவையாற்றியிருக்கிறார்.
இவர் இப்பள்ளிவாசல் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியில் பள்ளிவாசல் பரிபாலன விடயங்களுடன் நின்றுவிடாது ஊர் நலன் சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும் கரிசனை செலுத்தி, அவற்றில் பள்ளிவாசல் நிர்வாகத்தை முழுமையாக ஈடுபடுத்தி, பல்வேறு சேவைகளையும் திட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு முன்னின்று உழைத்தார்.
அதில் ஒரு முக்கிய விடயமாக சாய்ந்தமருது பிரதேச மக்களின் நீண்ட கால அபிலாஷையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை 2017ஆம் ஆண்டில் இருந்து பள்ளிவாசலை தளமாகக் கொண்டு முன்னெடுப்பதற்கு துணிச்சலுடன் தலைமைத்துவம் வழங்கினார்.
2006ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றமானது இப்பிரதேர்ச்சத்திலுள்ள பொது அமைப்புகளை ஒன்றிணைத்து தனியான உள்ளூராட்சி சபைக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்தபோது பள்ளிவாசலே இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தபோதிலும் குறைந்தபட்சம் ஒத்துழைப்பு வழங்குவதற்கோ ஆதரவை வெளிப்படுத்துவதற்கோ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வந்த நிலையில், தலைவர் வை.எம்.ஹனிபா அவர்கள் மிகவும் தைரியமாக, உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டு இப்போராட்டத்தை பள்ளிவாசல் தலைமையேற்று நடத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டு, இறுதி மூச்சுவரை அதனை சிறப்பாக வழிநடத்துவதில் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
ஓர் ஊர் மக்களின் தேவையொன்றை வெற்றிகொள்வதற்காக பள்ளிவாசல் ஒன்று முன்னின்று, அவ்வூர் மக்களை ஒரே கொடியின் கீழ் அணி திரட்டி, முழுத்தேசமும் வியக்குமளவுக்கு புரட்சியொன்றை முன்னெடுத்த வரலாற்று நாயகனாக வை.எம்.ஹனிபா ஹாஜியார் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இதற்காக அவர் தள்ளாத வயதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தியாகியானார். இதனால் அவர் அவ்வூர் மக்களால் ‘உமர் முக்தார்’ என்று போற்றப்படுகிறார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)