மொரகொடவே இந்தியத் தூதுதர்! சிக்கல் எதுவுமில்லை! இலங்கை அரசு அறிவிப்பு.

மிலிந்த மொரகொடவை தூதுவராக நியமிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இந்தியாவால் விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும் அறிவிப்பு எதுவும் இலங்கை அரசுக்குக் கிடைக்கவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொடவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதற்கு இந்தியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது எனவும், இலங்கை இந்தத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது எனவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “இவ்வாறான அறிவித்தல் எதுவும் அமைச்சரவைக்குக் கிடைக்கவில்லை. நான் அறிந்த வகையில் மிலிந்த மொரகொட இந்தியாவுக்குச் செல்வார்” என்று கூறினார்.