பெண்களுக்கு உடலில் கொழுப்பு சேர்வதற்கு காரணமும், அதற்கான தீர்வும்.
பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் வயிறு பெரிதாகிவிடுகிறது. வயிற்றை சுற்றிலும் கொழுப்பு படிவதே அதற்கு காரணம். இது ‘பேபி கொழுப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!
தூக்கம்: 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை 16 ஆண்டுகளாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் உடல் எடை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தூக்கம் உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளது. உடல் பருமன், கொழுப்பு பிரச்சினையை தவிர்ப்பதற்கு 7 மணி நேர தூக்கம் அவசியமானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புரோபயாடிக் பயன்பாடு: புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களை கொண்டவை. அவை செரிமான மண்டலம் சீராக செயல்படு வதற்கு உதவும். அத்துடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த பாக்டீரியாக்கள் சமநிலையுடன் உடல் எடையை ஒழுங்குபடுத்தவும், வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. லாக்டோ பேசில்லஸ் பெர்மென்டம், லாக்டோபேசில்லஸ் அமைலோவோரஸ், லாக்டோபேசில்லஸ் கேஸ்ஸரி போன்ற லாக்டோபேசில்லஸ் குடும்பத்தை சேர்ந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பான உடல்வாகுவை கட்டமைக்க உதவும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எடை தூக்கும் பயிற்சி: இந்த பயிற்சியை மேற்கொள்வது தசைகளை வலுவாக்குவதற்கு வழிவகுக்கும். அதற்காக கடினமான எடைகளை தூக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. கைக்கு அடக்கமான உபகரணங்களை கொண்டே பயிற்சிகளை தொடரலாம். ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வதும் பொருத் தமானது. இவை உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.
வெள்ளை சர்க்கரை: இது உடல் உறுப்புகளுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடியது. உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்தால் இதய நோய்கள், நீரிழிவு, உடல் பருமன், கல்லீரல் நோய்கள் ஏற்படலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும்.