தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம்.
தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம். பார்வதி – பரமேஸ்வரன், ஆண்டாள் – ஸ்ரீரங்கநாதர், தெய்வானை – முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.
ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், தந்தையாகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பவுர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
நவகிரகங்களின் தலைவனான சூரியன் தனது ஆசிரியரான குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. ஆண்டு முழுவதும் தான் பெற்ற பயிற்சியை தனது ஆசிரியரிடம் செய்து காட்டி தெளிவு பெறுவதாகக் கொள்ளலாம். பங்குனியில் குருவின் வீட்டில் சஞ்சரித்து முழுமையாக பக்குவம் அடைந்து அடுத்துவரும் சித்திரை மாதத்தில், அதாவது மேஷ ராசியில் சூரியன் முழுமையான உச்ச பலத்தோடு ஒளி வீசுவார். உச்ச வலிமை பெறுவதற்கு முன்னதாக ஆசிரியரிடம் பயிற்சி பெற்று பக்குவப்பட வேண்டும் என்பதை இந்தப் பங்குனி மாதம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.
அதே போன்று கணக்குத் தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்துத் துறைகளும் கணக்குத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.