கோட்டா அரசு விரைவில் கவிழும்! – ஜே.வி.பி. ஆரூடம்.
“இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான அரசாக கோட்டாபய அரசு தடம் பதித்துள்ளது. இந்த அரசு கவிழும் காலம் வெகுதொலைவில் இல்லை.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த அரசின் எதேச்சதிகாரப்போக்கால் நாட்டின் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் நாடு பேரவமானத்தைச் சந்தித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குச் சென்றுள்ளது. வறுமையின் பிடியில் சிக்கும் நிலையை நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
அரசின் திமிர்த்தனத்தை அடக்கவே வெளிநாடுகளினாலே இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாட்டுக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த மக்களின் ஆதரவுடன் இந்த அரசு ஆட்சிக்கு வந்ததோ அந்த மக்களினால் இந்த அரசு விரைவில் கவிழ்க்கப்படும்” – என்றார்.