‘தில்’ இருந்தால் தேர்தலை உடன் நடத்திக் காட்டுங்கள் -கோட்டாவுக்கு சஜித் சவால்.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் துணிவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் நடத்திக் காட்டட்டும்.”
இவ்வாறு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெற்ற நாட்களில், இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் விரைவில் நடைபெறவுள்ளது என ஜனாதிபதி தலைமையிலான அரச தரப்பினர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். ஆனால், கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர் – இலங்கை மீது புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது என ஓர் அமைச்சரும், கலப்பு முறைமையில் விரைவில் தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளது என இன்னோர் அமைச்சரும், புதிய அரசமைப்பு வந்த பின்னரே தேர்தல் நடக்கும் என மற்றுமோர் அமைச்சரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. தீர்மானத்துக்கு அஞ்சியே மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் விரைவில் நடைபெறும் என்று அரசு கூறியிருந்தது. ஆனால், தீர்மானம் நிறைவேறிய பின்னர் அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தற்போது நடைபெற்றால் அரசு படுதோல்வியடையும் என்பது ஜனாதிபதிக்குத் தெரிந்த விடயம். அதனால்தான் தேர்தலை நடத்துவதில் அரசு இழுத்தடிப்புச் செய்கின்றது.
ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் துணிவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் நடத்திக் காட்டட்டும்” – என்றார்.