சாய்ந்தமருது பள்ளித்தலைவர் வை.எம்.ஹனிபாவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் மறைவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 36ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணை மீது முதலவர் ஏ.எம்.றகீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், உறுப்பினர்களான அப்துல் அஸீஸ், பொன் செல்வநாயகம், சுஹைல் அஸீஸ், சப்ராஸ் மன்சூர், சி.எம்.முபீத் ஆகியோர் உரையாற்றினர்.
இதன்போது வை.எம்.ஹனிபாவின் கல்வி, சமூகப் பணிகள் பற்றியும் அவரது ஆற்றல், ஆளுமைகள் தொடர்பிலும் தனது பிரதேசத்தின் நலன்களுக்காக அவர் முன்னெடுத்த துணிச்சலான செயற்பாடுகள் குறித்தும் புகழாரம் சூட்டப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காக தனது ஆளுமையினால் ஊர் மக்கள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் அணி திரட்டி, போராட்டங்களை முன்னெடுத்து, சமூகப் புரட்சியொன்றை செய்துகாட்டி வரலாற்றில் நீங்கா இடத்தை அவர் பெற்றுச் சென்றிருக்கிறார் என்று அனுதாபப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் அப்துல் அஸீஸ் சுட்டிக்காட்டினார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)