கருணையா? கொலையா? : சண் தவராஜா
மனித குலம் உலகப் பொதுமையான ஒன்றே ஆயினும், அது கண்டங்கள், பிராந்தியங்கள், நாடுகள், தேசங்கள், இனங்கள், தனித்துவமான பண்பாடு, பாலியல் வேறுபாடு எனப் பல பிரிவுகளைக் கொண்டதாகவே இயங்கி வருகின்றது. இது சட்டங்களுக்கும் பொருந்தும். ஒரு நாட்டில் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் பிறிதொரு நாட்டில் சட்டத்துக்கு முரணானதாக இருக்கும். குறிப்பாக மரண தண்டனை, கருக்கலைப்பு போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். அத்தகைய ஒன்றே கருணைக் கொலையும்.
கொலை என்பதே மனித குலத்துக்கு விரோதமானது, அதில் கருணை எங்கே இருக்க முடியும் என்பது சாதாரணமாக அனைவரிடமும் எழக் கூடிய ஒரு கேள்வி.
ஒரு மனிதன் தனது இயலாமை காரணமாக அல்லது தீராத நோய் காரணமாக தனது வாழ்வை – சட்ட அடிப்படையில் – முடித்துக் கொள்வதே கருணைக் கொலை என வரையறுக்கப்படுகின்றது.
இத்தகைய கருணைக் கொலை உலகின் ஒருசில நாடுகளில் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி, மக்கள் மன்றங்களில் வாக்கெடுப்பை நடாத்தி, அரசியலமைப்பில் மாற்றங்களை உருவாக்கி இவை சட்டமாக ஆக்கப்படுகின்றன.
இத்தகைய ஒரு சட்ட மூலம் ஸ்பெயின் நாட்டின் மக்களவையில் மார்ச் 18 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 345 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 202 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாகவும், 141 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். இருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
“இன்று மிக முக்கியமான ஒரு நாள். நாங்கள் மனித உரிமைகளை அங்கீகரிக்கப் போகின்றோம். நாங்கள் மென்மேலும் மனிதாபிமானம் மிக்க, நீதியான சமூகத்தை நோக்கி நடை போடுகிறோம்” என வாக்கெடுப்புக்கு முன்னதாகத் தெரிவித்திருந்தார் சுகாதார அமைச்சரான கரோலினா டாரியஸ்.
வாக்கெடுப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த நாட்டின் தலைமை அமைச்சர் பெட்ரோ சான்சஸ் “நீதியான, சுதந்திரமான நாட்டில் இன்று நாங்கள் மேலும் மனிதாபிமானம் மிக்கவர்களாக மாறியுள்ளோம். சமூகத்தால் பரவலாக வேண்டப்பட்ட கருணைக் கொலைச் சட்டம் இறுதியில் சாத்தியமாகி உள்ளது” என்கிறார்.
இந்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்த வலதுசாரிக் கட்சிகளுள் ஒன்றான வொக்ஸ் (குரல்), நாடாளுமன்றின் முடிவுக்கு எதிராக அரசியலமைப்பு நீதிமன்றில் மேன் முறையீடு செய்யப் போவதாகக் கூறியுள்ளது.
புதிய சட்டத்தின் பிரகாரம் தீராத நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஒருவர், அல்லது தனது நோய் காரணமாக தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்யுமாறு கோரி விண்ணப்பிக்க முடியும். அவர் வயது வந்த ஒரு ஸ்பெயின் நாட்டுப் பிரசையாக அல்லது அந்த நாட்டில் சட்ட ரீதியாக வசிக்க வேண்டியது அவசியம். குறித்த நபர் தனது சுய நினைவோடு, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடவைகளில் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள தகைமைகளின் அடிப்படையில் ஒருவரின் விண்ணப்பத்தை அவரது மருத்துவர் நிராகரிக்க முடியும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மேலும் ஒரு மருத்துவர் அதனை அங்கீகரிக்க வேண்டும். தொடர்ந்து மருத்துவக் குழுவின் மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
அதேவேளை, இந்தச் செயன்முறையில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு மருத்துவர் கருணைக் கொலை தனது மனச்சாட்சிக்கு விரோதமானது என்னும் நிலைப்பாட்டைக் கொண்டவராக இருப்பின் அவர் விலகிக் கொண்டு, முடிவெடுக்கும் பொறுப்பை வேறொரு மருத்துவருக்குக் கையளிக்க முடியும்.
ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்றில் கருணைக் கொலை தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்ற வேளை, நாடாளுமன்றுக்கு வெளியே பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மேற்குலகைப் பொறுத்தவரை இதுபோன்ற இரு வேறுபட்ட மனநிலையிலேயே மக்கள் இருந்து வருகின்றனர்.
கருணைக் கொலைக்கான ஆதாரங்கள் பண்டைய வரலாறு எங்கணும் நிறைந்து காணப்படுகின்றன. புராதன கிரேக்க மற்றும் ரோம இராச்சியங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருணைக் கொலை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஹெம்லொக் ( hemlock ) எனப்படும் ஒருவகைப் பூண்டு இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (தத்துவஞானி சோக்ரட்டீஸ் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போதில் அவருக்கும் இந்தப் பூண்டின் நஞ்சே கொடுக்கப்பட்டது.)
அத்தகைய காலத்திலிருந்தே கருணைக் கொலை தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வந்திருக்கின்றன. சோக்கிரட்டீஸ், பிளேற்றோ போன்றவர்கள் கருணைக் கொலையை ஆதரித்து வந்த போதிலும், ‘மருத்துவத்தின் தந்தை’ என வர்ணிக்கப்படும், அவர்களின் சம காலத்தவரான ஹிப்போகிரற்றஸ் கருணைக் கொலை செய்வதை எதிர்த்துள்ளார்.
கருணைக் கொலை என்பதற்கு தற்போது பாவனையில் உள்ள Euthanasia என்ற சொல்லை அறிமுகம் செய்தவராக 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வெருலம் பிரபு ( Francis Bacon ) விளங்குகிறார். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பலவற்றின் முன்னோடியான இவர் இங்கிலாந்தின் சட்டமா அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
கருணைக் கொலை செய்வதற்கு அல்லது மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு தற்போது பாவனையில் உள்ள மோர்பின் 19 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.
கருணைக் கொலை வரலாறு எங்கணும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும் அவற்றுள் கவனம் பெற்ற சம்பவங்கள் இரண்டு. 1936 யனவரியில் இங்கிலாந்து அரசரான ஐந்தாம் ஜோர்ஜ் அவர்கள் இருதய மற்றும் சுவாச நோய்களால் அவதிப்பட்ட போது கருணைக் கொலை செய்யப்பட்டார். அவரது மருத்துவரான டோசன் பிரபு மோர்பின் மற்றும் கொக்கெய்ன் ஆகியவற்றைச் செலுத்தி இதனைச் செய்தார். எனினும் ஐம்பது வருடங்களாக இந்தத் தகவல் மறைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது சம்பவம் நாசி யேர்மனியில் நடைபெற்றது. ‘நாசிகள் காலத்து இனப் படுகொலை’ என வர்ணிக்கப்பட்ட இந்தச் சம்பவம் 1939 ஆம் ஆண்டு யூலை 24 இல் நிகழ்ந்தது. இதுவே உலக வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் நிகழ்த்தப்பட்ட கருணைக் கொலை எனப் பதிவாகி உள்ளது.
1939 பெப்ரவரி 20 இல் பிறந்த Gerhard Herbert Kretschmar பிறக்கும் போதே பல்வேறு பல்வேறு உடல் கோளாறுகளுடன் பிறந்தான். 2007 ஆம் ஆண்டு வரை ‘குழந்தை கே’ என அறியப்பட்டிருந்த இந்தக் குழந்தை பிறக்கும் போதே விழிப்புலனை இழந்ததாக மட்டுமன்றி ஒரு கையையும் ஒரு காலையும் கொண்டதாகவே பிறந்தது. தீவிர நாசி ஆதரவாளர்களான இந்தக் குழந்தையின் பெற்றோர் தமது குழந்தையைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு மருத்துவரை நாடினர். சட்டவிரோதமான காரியத்தைச் செய்ய மருத்துவர் சம்மதிக்காதபடியால், குழந்தையின் பெற்றோர் நேரடியாக அரச தலைவர் ஹிட்லருக்கே கடிதமொன்றை எழுதி அனுமதியைப் பெற்றனர்.
இந்தக் கோரிக்கை ஏற்படுத்திய மனப் பதிவின் காரணமாக ஹிட்லர் பிறப்பித்த உத்தரவு சுமார் மூன்று இலட்சம் மரணங்களுக்கு வித்திட்டது. நாட்டில் இருந்த அங்கவீனர்கள், மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியோர் என ‘பயனற்றவர்கள்’ எனக் கருதப்பட்ட யாவரும் கொல்லப்பட்டார்கள். இதில் ஐயாயிரம் முதல் எண்ணாயிரம் குழந்தைகளும் அடக்கம். குழந்தை கே என்னமோ பெற்றோர்களின் சம்மதத்தோடு கொலையானது. ஆனால், ஏனைய குழந்தைகள் வல்வந்தமாகப் பெற்றோரிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன.
இத்தகைய கொலையின் உச்சக்கட்டமாக, 1940 யனவரி 14 ஆம் திகதி சுமார் 70 ஆயிரம் வரையான ‘வலது குறைந்தவர்கள்’ எரிவாயு வண்டிகளிலும், கொலை முகாம்களிலும் கொலை செய்யப்பட்டார்கள். நவீன வரலாறு இவற்றை இனப் படுகொலை என்றே பதிவு செய்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒருசில நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், லக்ஸ்பேர்க், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கருணைக் கொலை சட்ட அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது. (போத்துக்கல் நாட்டில் கருணைக் கொலைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அது அரசியலமைப்பு நீதிமன்றத்தால் மார்ச் 16 ஆம் நிராகரிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.)
சுவிற்சர்லாந்து நாட்டில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ~பிறரின் உதவியுடனான தற்கொலை|க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் எவரும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்து இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். 2018 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இத்தகைய பிறரின் உதவியுடனான தற்கொலைகள் 221 வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுள் யேர்மன் நாட்டைச் சேர்ந்த 87 பேரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 31 பேரும், ஜக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 24 பேரும் அடங்குவர். மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய இந்தச் சேவையை Dignitas எனும் நிறுவனம் ஏற்பாடு செய்து வழங்குகின்றது. ‘கௌரவமாக வாழ்வதற்கும், கௌரவமாகச் சாவதற்கும்’ சேவை செய்வதாக குறித்த நிறுவனம் தெரிவிக்கின்றது.
ஐரோப்பாவுக்கு வெளியே கனடா, கொலம்பியா, அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலம், அமெரிக்காவின் சில மாநிலங்கள் போன்றவற்றில் கருணைக் கொலைக்கு அல்லது ~பிறரின் உதவியுடனான தற்கொலை|க்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உலகின் பல நாடுகளில் இது தொடர்பான விவாதங்கள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்ற வண்ணமேயே உள்ளன.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனித உயிரும் வாழ்வதற்கான உரிமையைக் கொண்டதே. எனவே, அத்தகைய உயிரை அழிப்பது முறையல்ல, அதற்கான உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால், உயிர் வாழ்தல் என்ற பெயரில் தாங்க முடியாத வலியையும், வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு அந்த வலியிலும், வேதனையிலும் இருந்து விடுதலையைப் பெற்றுத் தருவது சக மனிதனின் கடமை அல்லவா என்ற கேள்வி எழுகின்றது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், அத்தகைய முடிவை எடுக்கும் அதிகாரம் யார் கையில் உள்ளது? அவ்வாறான வேளையில் எடுக்கப்படும் முடிவுகள் யாவும் சட்டப்படி சரியாக இருந்தாலும், தார்மீக அடிப்படையில் சரியானதுதானா? நெருங்கிய குடும்ப உறவினர்களின் கையில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படும் போது, அது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இல்லையா? நோயாளி ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து விடுபட அல்லது சொத்துக்களைக் கவர இந்த வசதி பயன்படுத்தப்பட வாய்ப்பு இல்லையா? உறவினர்களுக்கு அப்பால் – ஹிற்லர் காலத்தைப் போல – அரசாங்கம் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முன்வந்தால் விளைவு என்னாகும்? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் உள்ளன.
மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தம்மிடம் தீர்வுகள் உள்ளன எனச் சொல்லும் மதங்கள் யாவும் கருணைக் கொலைக்கு எதிராகவே உள்ளன. குறிப்பாக, இஸ்லாம் மதம் கருணைக் கொலை என்ற பேச்சுக்கே இடம்தர முன்வராத நிலையே உள்ளது.
கருணைக் கொலைக்கு எதிரான குரல்கள் பொதுவாக மதவாதிகளிடம் இருந்தும், பழமைவாதிகளிடம் இருந்தும் அதிகமாக எழுகின்றன. அதேவேளை, முற்போக்காளர்கள் எப்போதும் கருணைக் கொலைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். இருதுருவக் கருத்து நிலையிலேயே கருணைக் கொலை தொடர்பான விவாதம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
“சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி” என்ற பாரதி பாடல் வரிகள் நினைவுக்கு வரவே செய்கின்றன. ஆனாலும், கருணைக் கொலை சரியா, தவறா என்ற கேள்விக்கு அழுத்தமான விடை தெரியவே இல்லை?