30/1 தீர்மானத்தாலேயே சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பியது! மங்கள சுட்டிக்காட்டு.
“2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 30/1 தீர்மானத்தை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியது.”
இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இணைய வழியாக அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தோடு 30/1 தீர்மானத்தை முன்வைத்து, சர்வதேச விசாரணையில் இருந்து நாட்டை மீட்டிருக்காவிட்டால், இன்று இலங்கையின் நிலை மிக மோசமாகியிருக்கும்.
பொருளாதார, அரசியல் ரீதியில் இலங்கை மிகப் பயங்கரமான நெருக்கடியை இலங்கை இன்று சந்தித்துள்ளது. இனியும் நாம் கிணற்றுத் தவளைகளாக இருக்க நேர்ந்தால், நாடு மிகப் பெரிய பொறியில் சிக்கிக்கொள்ளும்.
ஜெனிவா விவகாரம் இன்று இலங்கைக்கு எதிராக உருவாகுவதற்கு, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயவும், விசாரணைகளை நடத்துவதற்கும் ராஜபக்ச அரசு பான்கீமூனுடன் செய்துகொண்ட இணை ஒப்பந்தமே காரணம்.
2014 ஆம் ஆண்டு தீர்மானம் தொடர்ந்திருந்தால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, ஒரு சிலருக்கு எதிராக தண்டனை நிறைவேற்றவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.
எனினும், போர்க்குற்றசாட்டுக்கள் இருப்பின், அவற்றை உள்ளக நீதிமன்றப் பொறிமுறையில் கண்டறிவோம் எனவும், நாட்டில் சுயாதீன நீதிமன்றம் உருவாக்கப்படும் எனவும் நாம் வாக்குறுதியளித்தோம்.
அதேபோன்று, செப்டெம்பர் வரையில் கால அவகாசத்தைப் பெற்று, எமக்கான தீர்மானம் ஒன்றை உருவாக்கி, நாம் எவ்வாறு இந்தச் செயற்பாடுகளைக் கையாளப்போகின்றோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்து தப்பித்துக்கொண்டோம்” – என்றார்.