நசுக்கி ஒடுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழருக்காக ஐ.நாவில் பகிரங்கமாகச் சாட்சியமளித்தவரே ஆயர்.சுமந்திரன் கவலை.
“அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அடக்கப்பட்ட நேரத்திலும் ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை போரின்போதும் போருக்குப் பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்த ஒரு குரல். போரில் நசுக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட அல்லது காணாமல்போனோரின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கிட்டு சர்வதேசத்துக்கும் ஆணைக்குழுக்களின் முன்பும் பகிரங்கமாகவே சாட்சியம் அளித்த ஒருவர். எமது மக்களின் இன்னல்களுடன் அனைத்து வழிகளிலும் பாடுபட்டதோடு அவை தொடர்பில் எமக்கு காலத்துக்குக் காலம் உரிய ஆலோசணைகளையும் வழங்கி வந்த ஒருவரை இழந்து நிற்கின்றோம்.
இலங்கை கத்தோலிக ஆயர் பேரவைக்கு சட்ட ஆலோசகராக நான் செயற்பட்ட காலத்தில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையுடனான உறவு மேலும் அதிகரித்தது. என்றுமே மக்களின் விடயங்களிலேயே அதிக கரிசனை கொண்டவராகக் காணப்பட்ட ஆயர், நோய்வாய்ப்பட்ட பின்பும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என இரவு பகலாக முயற்சித்தார். அதனால் இன்று அவரை இந்த முயற்சியில் இருந்து நிரந்தரமாக விடுவித்துள்ளது.
இவ்வாறு தனது இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த முடியாத துயருமாகும். இதனால் ஆயரின் பிரிவால் துயருற்ற அனைவருக்கும் விசேடமாக கத்தோலிக்க மக்களுக்கும் எனது இரங்கலைக் காணிக்கையாக்குகின்றேன்” – என்றுள்ளது.