மேலும் 4 பேரை கைதுசெய்தது ரி.ஐ.டி.!
அடிப்படைவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் இருவர் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீம், தாக்குதலுக்கு முன்னர் சில நபர்களுடன் உறுதிமொழி எடுக்கும் வீடியோவை இணையத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
31 மற்றும் 32 வயதுடைய இவர்கள் இருவரும் வெல்லப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இவர்கள் கட்டாரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்றும், அங்கிருந்துகொண்டு ‘வன் உம்மா’ என்ற பெயரில் ‘வட்ஸ் அப்’ குழுவொன்றின் ஊடாக அடிப்படைவாதத் தகவல்களை பரப்பி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மூதூர் பிரதேசத்தில் அடிப்படைவாத வகுப்புகளை நடத்தி சென்றனர் என்று 37 மற்றும் 38 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.