மனித நேய விடயங்களில் மிகத்துணிச்சலானவர் ஆயர் ஜோசப்! – இரங்கல் செய்தியில் சரவணபவன்.
“மனிதநேயம் தொடர்பாக, ஓய்வுநிலை ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் செயற்பாடுகள், அவர் கொண்ட நேர்மையும் துணிச்சலும் அவரைத் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமை மீறலுக்கு எதிரான செயற்பாட்டாளராக இனம் காணவைத்தது.”
இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
இது குறித்து அவர் விடுத்த இரங்கல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது வள்ளுவன் வாக்கு. அப்படித் தமது வாழ்வை முழுமையாக வாழ்ந்து முடித்து, தம்மை முழுமையாக அடையாளப்படுத்தி மறைந்துள்ளார் மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை.
ஆயர், தனது சேவைகளை மக்கள் தொண்டாகப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டதோடு அதனைத் தனது வாழ்வின் இலக்காகவும் ஆக்கிக் கொண்டவர். மனிதநேயம் தொடர்பான அவரது செயற்பாடுகளில் அவர் கொண்ட நேர்மையும் துணிச்சலும் அவரைத் தேசிய மற்றும் சர்வ தேச மட்டத்தில் மனித உரிமை மீறலுக்கு எதிரான செயற்பாட்டாளராக இனம் காணவைத்தது.
போர்க்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் துணிச்சலானவை மட்டுமல்ல பல சவால்களை அழுத்தங்களை அவர் எதிர்கொள்ளவும் வைத்தன. இருந்தும் எந்த வகையிலும் அவர் மக்களுக்கான தன் பணிகளை நிறுத்தியதே கிடையாது.
இறுதி வரை அவர் எந்த அளவுக்குத் தன்னை ஒரு மனித நேயச் செயற்பாட்டாளராக நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த அளவுக்குத் தமிழ்த் தேசிய உணர்வுள்ளவராகவும் இனம் காட்டிக்கொண்டார்.
அவரது மறைவு தமிழ் மக்களுக்கு ஒரு இறை தூதனை இழந்த துயரத்தைக் கொடுத்திருப்பது நிஜமே!என்றுள்ளது.