வடக்கில் கட்டுப்பாட்டை தளர்த்தவே வேண்டாம்!தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்து.

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளில் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“வடக்கில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் பயணம் செய்கின்றனர். விசேடமாக ஆசிரியர்கள் பெருமளவானவர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்கள் பயணிக்கும் பஸ்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில்லை. இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி அறிவுறுத்தல்களை வழங்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்விடயம் தொடர்பில் பொலிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிலளித்தார்.
இதைவிட வெளிமாகாணம், மாவட்டங்களில் தொழில் நிமித்தம் சென்று வருவோருக்கு முன்னைய இறுக்கமான நடைமுறைகள் இல்லை என்றும், அதனால் கூடவே பணியாற்றுவோருக்கு ஆபத்தானது என்றும் பொதுச்செயலாளர் எடுத்துரைக்க, பணிப்பாளர் சுகாதார அமைச்சு அந்த இறுக்கமான நடைமுறைகளை தொடர்ந்தும் நீடிக்கத்தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். இது தொடர்பில் சுகாதார அமைச்சே அறிவுறுத்தல்களை வழங்கும் எனக் கூறியுள்ளார்.
அதிபர், ஆசிரியர், மாணவர் சார்ந்த சமூகம் அதிகளவானது அதனை மிக நிதானத்துடன் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டிய அவசியத்தை இருவரும் வலியுறுத்தியுள்ளனர்” – என்றுள்ளது.