உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய அதிகப்பட்ச பாதுகாப்பு.
எந்த பயமும் இல்லாமல் இறை வழிபாட்டில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய அதிகப்பட்ச பாதுகாப்பு தற்போதைய நிலையில் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எந்த பயமும் இல்லாமல் இறை வழிபாட்டில் ஈடுபடுமாறு இராணுவத்தளபதி இதன் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒவ்வொரு தேவாலயத்திற்கும் பாதுகாப்பு வழங்குவது மிகவும் கடினம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்டர் தாக்குதலின் போது தேவாலயங்கள் மட்டுமல்ல, சில ஹோட்டல்களும் தாக்கப்பட்டன. அந்த ஹோட்டல்களில் இருந்தும் இராணுவ பாதுகாப்பைக் கோருகிறார்கள், ஆனால் பொதுவாக பொலிஸ் இது தொடர்பாக செயல்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி, பொலிஸாருக்கு மேலதிகமாக, முப்படைகளும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான பாதுகாப்பை வழங்கியுள்ளன. சில நேரங்களில் குறித்த இடத்தில் இராணுவம் அல்லது பொலிஸார் இல்லாவிட்டாலும் கூட, முடிந்தவரை பாதுகாப்பை வழங்க முயற்சிக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்றாலும், பொதுவாக இப்பகுதியில் பாதுகாப்பை வழங்கும் ஒரு முறைமையின் கீழ் நாங்கள் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இந்த வார தொடக்கத்தில் இருந்து இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. என்றார்.