அரசின் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சுற்றாடல் அமைப்புகளின் கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம்.
இலங்கையில் அரசின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான காடழிப்பு நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி கொழும்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சுற்றாடல் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது.
வில்பத்து, சிங்கராஜ, யால உட்பட பல்வேறு பகுதிகளிலும் காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும், அவை உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சிங்கராஜ இயற்கை வனத்தில் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாட்டு மக்கள் கட்சி பேதமின்றி காடழிப்பை எதிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் கூறினர்.