பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஈஸ்டர் தின நிகழ்வுகள்!
2019 ஆண்டு ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது வருட ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மலையக கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் அமைதியான முறையில் 04.04.2021 (இன்று) மிக சிறப்பாக இடம்பெற்றன.
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் தேவ ஆராதனைகள் ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் நடைபெற்றன.
இதன் போது ஈஸ்டர் தின திருப்பலி ஒப்புக்கொடுத்தல் இடம்பெற்றதுடன், ஈஸ்டர் தினத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் புனித தீர்த்தமும் வழங்கப்பட்டன.
அத்தோடு, நுவரெலியா, புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தின் ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய பங்கு தந்தை அருட் சுதத் ரோகன பெரேரா தலைமையில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 03.04.2021 அன்று இரவு முதல் இன்று வரை பல தேவ ஆராதனைகளை மேற்கொள்ளப்பட்டன. இந்த தேவ ஆராதனைகளில் மட்டுப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ அடியார்களே கலந்து கொண்டதுடன் இரண்டு மொழிகளிலும் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.