“கனுகஹவெவ முன்மாதிரிக் கிராமம்” ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு.
“கிராமத்துடன் கலந்துரையாடல்” நான்காவது நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட பணிப்புரை மூன்று மாதங்களில் நிறைவேறியது…
கெப்பித்கொல்லாவ “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தின்போது மக்கள் முன்வைத்த மனக்குறைகளை செவிமடுத்ததன் பின்னர் ஜனாதிபதி அவர்கள், கேட்டுக்கொண்டதன்பேரில் விமானப் படையினர் நிர்மாணித்த கனுகஹவெவ முன்மாதிரிக் கிராமம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (04) பிற்பகல் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நான்காவது நிகழ்ச்சித்திட்டத்திற்காக அனுராதபுரம் நகரத்திலிருந்து 73 கி.மீ தூரத்தில் உள்ள கெபிதிகொல்லேவ பிரதேச செயலக பகுதியில் உள்ள கனுகஹவெவ கிராமம் தெரிவு செய்யப்பட்டது. கெபிதிகொல்லேவ பிரதேசம் பிரிவினைவாத போரின்போது அடிக்கடி எல்டீடீஈ பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பிரதேசமாகும். 2006 ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஹல்மில்லவெடிய கிராமத்தில் கெபிதிகொல்லேவ பஸ் வண்டியொன்று புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதில் கனுகஹவெவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர்.
1995 முதல் 1998 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக முகாம்களில் வாழ வேண்டி ஏற்பட்டது. இப்போது அந்த அச்சுறுத்தல் முடிந்துவிட்டாலும், அவர்கள் பல கடுமையான பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்தல், குளங்களை புனரமைத்தல், வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி,போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனுகஹவெவ கிராமத்தில் வீடுகள் உள்ளிட்ட தேவைகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன ஏற்றுக்கொண்டிருந்தார். கிராமத்தின் விகாராதிபதி, கிராம அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தலைவர் ஆகியோருடன் இணைந்து கிராமத்தின் தேவைகளை அடையாளம் கண்டு விமானப்படைத் தளபதியிடம் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இன்று கனுகஹவெவ கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் அபிநவாராம விகாரைக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் விகாராதிபதி தேரரை சந்தித்து உரையாடினார்.
முன்மொழியப்பட்டிருக்கும் விகாரை நிர்மாணிக்கப்படும் காணியையும் நிர்மாணப்பணிகளையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
கனுகஹவெவ ஆரம்ப பாடசாலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகள் மற்றும் ஆசிரியர் இல்லத்தின் திறப்புகளை வீட்டு உரிமையாளர்களிடமும் அதிபரிடமும் கையளித்தார்.
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் பாடசாலை பிள்ளைகளுக்கு சீறுடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கனுகஹவெவ ஆரம்ப பாடசாலையின் விளையாட்டு மைதானம் முன்மாதிரி வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைத் திட்டம், ஆசிரியர் இல்லம் மற்றும் நடமாடும் கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திர சிகிச்சை என்பவற்றை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி அவர்கள் கனுகஹவெவ கிராமத்தில் 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கனுகஹவெவ முன்மாதிரி கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு வீடு மற்றும் கனுகஹவெவ முன்மாதிரி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 கிலோ மீற்றர் நீளமான யானை வேலி என்பவற்றையும் பார்வையிட்டார்.
அருகில் இருந்த வீடொன்றுக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், வீட்டில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெகான் சேனசிங்க, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.எச்.நந்தசேன, கே..பி.எஸ்.குமாரசிறி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரும் விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு