மார்ச்சில் அச்சிட்ட 4 ஆயிரம் கோடி ரூபா பணம் எங்கே? அரசிடம் சஜித் கேள்வி.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து கோடி ரூபாவை அரசு அச்சிட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஆட்சியின்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பில் சிறிதளவு சரிவு ஏற்பட்ட போது, ‘எங்களிடம் ஆட்சியைத் தாருங்கள்; இலங்கை நாணயத்தின் மதிப்பை அதிகரித்துக் காட்டுகின்றோம்’ என த் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அன்று சவால் விடுத்தார்கள்.
ஆனால், அவர்களின் ஆட்சியில்தான் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு நாளுக்கு நாள் என்றும் இல்லாத அளவில் சரிவடைந்து செல்கின்றது.
இது அவர்களின் திறமையா? அல்லது, தோல்வியா? என நாம் கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.
மார்ச் மாதத்தில் இவ்வாறு அச்சிடப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது? சாதாரண மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளபோது, இந்தப் பணத்தைக் கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள்” – என்றார்.