பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை! சஜித் அணி கவலை.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே, தாக்குதலின் பின்பலம் கட்டாயம் கண்டறியப்பட வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து, உடல் அவயங்களை இழந்தனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கைதுகள் இடம்பெற்றிருந்தாலும் நல்லாட்சியின்போது நீதி கிடைக்கவில்லை. அரசுக்குள் இருந்துகொண்டு நீதிக்காகப் போராடினோம். அப்போராட்டம் பலனளிக்கவில்லை.
மேற்படி தாக்குதலை வைத்து பிரசாரம் செய்துதான் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால். இன்னும் நீதி கிடைக்கவில்லை. தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார், திட்டமிட்ட குழுவினர் யார், நிதி உதவி வழங்கியது யார் என்பன உட்பட அனைத்து விடயங்களும் கண்டறியப்படவேண்டும். அத்திசையை நோக்கி அரசு பயணிப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளை, மதத்தை அடிப்படையாகக்கொண்டு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் தரப்புகளுடன் கூட்டணி வைக்கப்படக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்” – என்றார்.