ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராகக் கட்சிகளை அணிதிரட்டுகின்றது அஸ்கிரிய பீடம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அஸ்கிரிய பீடம் அடியோடு நிராகரித்ததுள்ளது.
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணி திரள வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அஸ்கிரிய பீடத்துக்கு நேற்று சென்றபோதே, வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒரு நாடாக ஐக்கியப்படாவிட்டால், எதிர்ச் சக்திகள் நன்மையடைந்துவிடும்.
இலங்கை இராணுத்தினர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை முழு உலகமும் கண்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்குச் சார்பான தரப்பினர் முன்வைக்கும் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், இன, மத, கட்சி பேதம் கடந்து இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும்” – என்றார்.